Monday 15 October 2012

யாரிவன்???

மவுனங்கள் மட்டுமே வீழ்ந்துகிடக்கும்
ஆள் இல்லா கானகத்துள்
தனித்து விடப்பட்ட சிறு தும்பியாய் நான்...!

வழிபோக்கர் யாருமில்லா தடங்கள் மீது திடீரென
தோன்றும் சலசலப்பாய்
எங்கிருந்தோ ஒலிக்கிறது அவனின் குரல்...!

ஹெல்லோ என்கிறான்...!

யாரிவன்? இவனுக்கும் எனக்கும்
என்ன பந்தம்?

கொட்டும் மழையாய் அவன்
குரலின் ஈர்ப்பு
வைத்திருக்கும் என்னை
அத்தனை புத்துணர்ச்சியாய்...!

என்னிடத்தில் அவன் காட்டும் அலட்சியம்
ரகசியமாய் காட்டிக்கொடுக்கும்
என்மேல் அவனுக்கான அக்கறையை...!

நான் சீண்டி விளையாடவும்
மனம் நிறைந்து சிரிக்கவும்
திட்டித் தீர்க்கவும், கொட்டிக் குமுறவும்
என்னை நான் முழுதாய் உணரவும்
எனக்கென இறைவன் படைத்த
விளையாட்டு பொம்மையிவன்...!

சோலைக்குள் நான் துயிலும் நாட்களெல்லாம்
காணாமல் போகின்றவன்
வெறுமை சூழ்ந்த அடுத்த நொடி
“என்னாச்சுடி” என எட்டிப் பார்க்கிறான்...!

என் ஒரே ஒரு குரலுக்கு ஓடி வருகிறான்
எனக்காக பதறுகிறான்
என் கண்ணீர ஏந்துகிறான்
நான் சிரிக்கும் அடுத்த நொடி “பை”யென
கையசைத்து விட்டு
வெடுக்கென ஓடி விடுகிறான்...!

கொல்லும் தனிமையை கவி எழுதி வதைத்து விடு,
காத்திருக்கிறேன் என்றவன்
அதை படிக்க போவதில்லையென அவனும் அறிவான்
அவனை அறிந்த நானும் அறிவேன்...!

இதோ அவனுக்கான என் கவியும்
என்னோடு சேர்ந்து தனிமையில்...!


1 comment:

  1. எல்லாவற்றையும் சொல்லி விட்டு "யாரிவன்???" என்று கேட்டு விட்டீர்களே...!!!

    ரசித்தேன்...

    ReplyDelete