Tuesday 1 May 2012

நான் கவிதாயினி இல்லை


நான் கவிதாயினியுமில்லை
கவிதைக் காதலியுமில்லை...
என்னின் உணர்வுகளின்
மொத்த வெளிப்பாடு நான்...
என்னை நானே நேசிக்க கற்றதால்
எனக்குள் நானே ஊடலும் கொள்கிறேன்...

உணர்வு குவியலின்
உணர்ச்சிப் பிழம்பாய் நான்...
என் மனம் எப்பொழுதும்
ஏதோ ஒன்றால் நிரப்பப்பட்டுக்
கொண்டிருக்கிறது...

நண்பர்களின் கவிதைகள்
மலைப்பாய்த் தோன்றும் தருணம்
மலையளவு மலைத்திருக்கிறேன்...
மலைப்பு மாறும் முன்
மனம் சிறுபிள்ளையாய் விளையாடக் கெஞ்சும்..

வார்த்தைகளின் கோர்வைகள்
சிந்தனைச் சிதறாமல் உதிரும்போது
ஒரு பூக்காரியாய் அதை
மாலையாக்கி கோர்த்துவிட விழைகிறேன்...


அழுகை வந்தால் அழவும்
சிரிப்பு வந்தால் சிரிக்கவும்
காதல் வந்தால் காதலிக்கவும்
தெரிந்த உயிருள்ள பொம்மை நான்...

உற்சாகம் கொப்பளிக்கும் நாட்களில்
மனம் தென்றல் வருடும் புயலாய்
பெருக்கெடுக்கிறது...
சஞ்சலத்தால் சலிப்புற்ற நேரங்களிலோ
அமைதி ஆழிப்பேரலையாய்
ஆக்ரோஷம் கொள்கிறது...

என்னை உணரா நட்பூக்கள்
உதிரும் நேரம் என்னின்
ஒருசொட்டு உற்சாகம் கூடவே உதிர்கிறது...
புரிந்துக் கொண்ட நட்பூக்களால்
லட்சம் முறை ஜனனம் சேர்ந்தே
ஆயுள் நீட்டிக்கிறது....

மொத்தத்தில்...
நான் என்றும் நானாய்...
அதே நிலையில் நீடிப்பதால்
வாழ்வின் எல்லா பக்கங்களையும் சுவாசிக்கிறேன்...
நான் கவிதாயினியுமில்லை
நல்ல கவிதை வாசிப்பவளுமில்லை...
மனமென்னும் சுதந்திர வானில்
சிறகடித்துப் பறக்கும் பட்டாம்பூச்சி...

1 comment:

  1. //என்னை உணரா நட்பூக்கள்
    உதிரும் நேரம் என்னின்
    ஒருசொட்டு உற்சாகம் கூடவே உதிர்கிறது...
    புரிந்துக் கொண்ட நட்பூக்களால்
    லட்சம் முறை ஜனனம் சேர்ந்தே
    ஆயுள் நீட்டிக்கிறது....//
    // வாழ்வின் எல்லா பக்கங்களையும் சுவாசிக்கிறேன்...//

    - கவிதாயினி

    ReplyDelete